Wednesday, November 26, 2014

அதீதமாய்க் கொஞ்சம்

சுவை படச் சொல்
 
2011_ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் சில நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட அதீதம் மின்னிதழ், ஜூலை 2011_ல் எங்கள் குழுவின் வசம் வந்தது. அதே பாதையில் பல சுவாரஸ்யமான கட்டுரைகள், வித்தியாசமான தொடர்கள், மொழிபெயர்ப்பு ஆக்கங்கள், சிறுகதை, கவிதை, நூல் மற்றும் திரை விமர்சனங்கள், ஃபோட்டோ கார்னர், இ_புத்தகங்கள், வலைப்பூ-எழுத்தாளர் அறிமுகங்கள் என செப்டம்பர் 2014 வரை எடுத்துச் சென்றோம். Domain தளத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் இருமாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயங்குகிறது அதீதம் இங்கே: www.atheetham.com . ஆனால் பழைய படைப்புகளை உடனடியாக அங்கே மாற்றிட முடியாத நிலையில் இந்தத் தளத்தில் அவற்றை வலையேற்ற எண்ணியுள்ளோம். இயன்றவரை பழைய படைப்புகள் இங்கே சேமிக்கப்படும். பின் இந்தத் தளத்தின் இணைப்பு அதீதம் இதழின் முகப்பில் இடம்பெறும். அல்லது  “2011-2014 படைப்புகள்” எனும் பகுப்பின் (லேபிள்) கீழ் அவற்றை அங்கேயே கொஞ்சம் கொஞ்சமாக வலையேற்றிடும் எண்ணமும் உள்ளது.

ஏற்பட்ட இடையூறுக்கு வருந்துகிறோம். வாசகர்களும் படைப்பாளிகளும் தொடர்ந்து தங்கள் ஆதரவைத் தரக் கேட்டுக் கொள்கிறோம்.

இனி அதீதம் ஒவ்வொரு மாதமும் ‘முதலாம், இரண்டாம்’ இதழ்களாக வெளிவரும்.  தொடர்கள் தருகிறவர்கள் வசதிக்காகவும், வகைப்படுத்தும் வசதிக்காகவும் மாதமிருமுறை என்பது பின்பற்றப் பட்டாலும், வருகிற படைப்புகள் உடனுக்குடன் அப்போதைய இதழுடன் இணைக்கப்பட்டு வெளியாகும்.

படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை articlesatheetham@gmail.com எனும் வழக்கமான மின்னஞ்சல் முகவரிக்கே தொடர்ந்து அனுப்பிடலாம்.

- ஆசிரியர் குழு

Friday, March 4, 2011

அதீதம் -ஓர் அறிமுகம்

அன்பார்ந்த இணையத் தமிழ் வாசகர்களே..

 வணக்கம்.

 தமிழ்ச்சூழலில் பெருகி வரும் இணையப் பயன்பாடு, படைப்புகளுக்கும், செய்திப் பரிமாற்றங்களுக்கும், விவாதங்களுக்கும் உரிய களங்களின் தேவையை இன்னும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இது ஒரு மகிழ்வான விஷயமே.!

 இன்றைய காலகட்டத்தில் தமிழ் படைப்புலகம் சற்றே சோர்வடைந்துள்ளதாகவும், வியாபார நோக்குடைய வீண் பரபரப்பை ஏற்படுத்தும் எழுத்துகளிலும், உயர்வு நவிற்சியோடு பரப்பப்படும் செய்திகளிலுமே மக்களின் ஆர்வம் குவிக்கப்படுவதாகவும் மூத்தோர் சிலர் வெளிப்படையாகவே மேடைகளில் பகிர்ந்துகொள்வதைக் கேட்கமுடிகிறது.

 எழுதும் ஆர்வமும் ஆசையும் இருப்பவர்களுக்கு அச்சில் எழுத்தைக் காண்பது என்பது முந்தைய தலைமுறையில் அரிதிலும் அரிதான ஒன்று. அப்போது அந்த எண்ணத்தில் தீவிரமாக இருப்பவர்கள் நண்பர்களுடன் இணைந்து கையெழுத்துப் பத்திரிகைகளை உருவாக்குவார்கள். அந்தப் பத்திரிகைகளின் வீச்சு மிகச்சிறிது. மேலும் அவை ஒரு இதழோடு அல்லது சில இதழ்களோடு நின்று போகும்.

 இப்போது நிலைமை அப்படியல்ல. தலைமுறை தாண்டியிருக்கிறோம். இணையம் அளப்பரிய வசதிகளை அள்ளி வழங்குகிறது. வலைப்பூக்களில் ஆர்வமிக்க புதியவர்கள் புதிய சிந்தனைகளோடு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் அவை வலிமையற்ற எழுத்துகளாகவே இருப்பதாக மூத்தவர்களால் கருதப்பட்டாலும், இது ஒரு துவக்கமே. இனி இன்னும் தீவிரமானவர்கள் உருவாகுவார்கள். வீரியமான எழுத்துகளும், படைப்புகளும் உருவாகும். அவை தொடர்ந்து பேசப்படுவதன் மூலம் ஒரு இணையத் தலைமுறையின் ரசனையே தொடர்ந்து மேம்படும்.

 அவ்வாறான நல் நோக்கத்துக்காகவே சில நண்பர்களின் முயசியால் இந்த ‘அதீதம்’ உருவாக்கப்பட்டிருக்கிறது. துவக்கத்தில் மாதமிருமுறை இதழாக ‘அதீதம்’ செயல்படும். ‘அதீதம்’ படைப்புகளுக்கு மட்டுமேயான ஒரு தனி களமாக மிளிர வேண்டும் என்பது எங்கள் ஆசை. ஒரு ஆசிரியப்பாங்குடன் தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் ‘அதீதத்’தில் பங்குபெற வேண்டும் என்பது நம் விருப்பம். அதற்கான முயற்சியில் இருக்கிறோம் எனினும் தமிழ் வலையுலகில் இயங்கிக்கொண்டிருக்கும் புதிய எழுத்தாளர்களுக்கான வலுவான களமாகச் செயல்படுவதே ‘அதீதத்’தின் முக்கிய நோக்கமாக இருக்கும்.

 வாருங்கள், இணைந்து பயணிப்போம். முதல் இதழில் ஆர்வத்துடன் பங்குபெற்ற இளம் படைப்பாளிகளுக்கு எங்கள் நன்றி. சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், புகைப்படங்கள் போன்றவற்றில் ஆர்வமுள்ள படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் atheetham@gmail.com

 தமிழ்ப் படைப்புகளுக்கான களமாக இருக்கப்போகிற ‘அதீதம்’ இப்படியொரு மகிழ்வான ’தமிழர் திருநாள்’ கொண்டாட்ட தினத்தில் வெளியாவது பொருத்தமானது. அனைவருக்கும் ’அதீதம்’ தன் அன்பான தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறது. வளம் பெருகட்டும்.

 அன்புடன்,
அனந்த் செழியன்ஆசிரியர்